ADDED : மார் 21, 2025 11:22 PM
மும்பை; அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில், அலுமினியம், காப்பர் தொழில்களில், 45,000 கோடி ரூபாயை ஹிண்டால்கோ நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்து உள்ளார்.
ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தின் புதிய இலச்சினை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற குமார் மங்கலம் பிர்லா தெரிவித்ததாவது:
இந்தியாவின் மின்சார வாகனங்களுக்கென முதல் காப்பர் பாயில் ஆலையை ஹிண்டால்கோ அமைக்க உள்ளது.
குஜராத்தின் பகாஜன் அருகே, காப்பர் மற்றும் மின்னணு பொருட்கள் மறுசுழற்சி ஆலையை அமைப்பதற்கு, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்த ஆலையில், ஆண்டுக்கு 50,000 டன், கார்பன் குறைந்த காப்பர் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
ஒடிசாவில் அலுமினியம் உருக்கு ஆலைக்காக, 100 மெகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையம் அமைப்பதுடன், எலக்ட்ரிக் வாகனம், செமிகண்டக்டர், உயர்ரக மின்னணு பொருட்கள் ஆகியவற்றில் ஹிண்டால்கோ கவனம் செலுத்த உள்ளது.
ராணுவம், விண்வெளித்துறை சார்ந்த தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.