'இந்திய நிர்வாக நடைமுறையை ஹிண்டன்பர்க் இழிவுபடுத்தியது'
'இந்திய நிர்வாக நடைமுறையை ஹிண்டன்பர்க் இழிவுபடுத்தியது'
ADDED : மார் 15, 2024 01:24 AM

மும்பை:அதானி குழுமத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை, குழுமத்தை சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் நிர்வாக நடைமுறைகளையும் அரசியல் ரீதியாக இழிவுபடுத்தியதாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான, ஹிண்டன்பர்க், அதானி குழுமம், பங்கு சந்தையில் மோசடி செய்ததாக, கடந்தாண்டு ஜனவரியில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இதையடுத்து, பங்கு சந்தையில், அதானி குழுமத்தின் பங்கு விலை, கடும் சரிவை சந்தித்தது. அரசியல் ரீதியிலும், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும், அதானி குழுமம், இந்த முறைகேடுகள் அனைத்தையும் மறுத்தது. இந்த முறைகேடு குறித்த அடுத்தகட்ட விசாரணையை, குழுமம் எதிர்கொள்ளத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கவுதம் அதானி பேசியதாவது:
கடந்த ஆண்டு, ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை, குழுமத்தை மட்டும் சீர்குலைக்கவில்லை, இந்தியாவின் நிர்வாக நடைமுறைகளையும் அரசியில் ரீதியாக இழிவுபடுத்தியது.
குழுமத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், நாங்கள் உறுதியாக நின்றோம்.
எங்கள் நற்பெயரை பாதுகாப்பது மட்டுமல்லாமல், எங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதையும் நாங்கள் உறுதி செய்தோம்.
அறிக்கையால் ஏற்பட்ட பின்னடைவு, எங்கள் மீள்தன்மை குறித்த நம்பிக்கையை அதிகரித்தது. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும், மீண்டும் வலுவாக திரும்புவதை எடுத்துக்காட்டும் வகையில், எங்கள் மீட்பு உள்ளது.
இவ்வாறு பேசினார்.

