8 மாநகரங்களில் வீடு விலை சராசரியாக 11 சதவீதம் உயர்வு; சென்னையில் 2% விலை அதிகரிப்பு
8 மாநகரங்களில் வீடு விலை சராசரியாக 11 சதவீதம் உயர்வு; சென்னையில் 2% விலை அதிகரிப்பு
ADDED : டிச 03, 2024 08:37 PM

புதுடில்லி; சென்னையில் வீடு விலை, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 2 சதவீதம் உயர்வு கண்டு, 1 சதுர அடி சராசரியாக 7,889 ரூபாயாக உள்ளது.
கட்டுமானத் துறை அமைப்பான கிரடாய், புள்ளிவிபர சேகரிப்பு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை உட்பட நாட்டின் எட்டு பெருநகரங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில், வீடு விலை சராசரியாக 11 சதவீதம் அதிகரித்துள்ளது. வீடுகள் தேவை அதிகரித்திருப்பதால், அதிகபட்சமாக டில்லியில், 32 சதவீதம் விலை உயர்வு கண்டது.
சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங் களூரு, புனே, ஹைதர பாத், அகமதாபாத், சூரத் ஆகிய அனைத்து பெருநகரங்களில் ஒன்றில்கூட விலை சரிவு ஏற்படாமல், உயர்வு கண்டிருக்கின்றன. டில்லியில், ஒரு வீட்டின் சராசரி விலை சதுர அடிக்கு 11,438 ரூபாய். கடந்த ஆண்டில் இது 8,655 ரூபாயாக இருந்தது.
பெங்களூருவில் 9,471ல் இருந்து 11,743 ரூபாயாக, சதுர அடி விலை ஓராண்டில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. அகமதாபாத் --16 சதவீதம், புனே - 10 சதவீதம், மும்பை - 4 சதவீதம் வீடு விலை உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் 2 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.