ADDED : ஜன 06, 2025 12:14 AM

வீட்டுக்கடனுக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், கடனுக்கான அனுமதி நிலையை ஆன்லைன் மூலம் பின்தொடர்ந்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடனுக்கான பல்வேறு செயல்முறைகளைக் கொண்டிருந்தாலும், கடன் அனுமதி நிலையை, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் விண்ணப்பக் குறிப்பு எண் மூலம் அறிந்துகொள்ள வழி செய்கின்றன.
வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக கடன் விண்ணப்ப நிலையை அறியலாம். இணையதளத்தில் உள்ள கடன் பிரிவிற்கு சென்று, அதில் கேட்கப்படும் விபரங்களை சமர்ப்பித்து, கடன் நிலை பற்றிய தற்போதைய தகவலைப் பெறலாம்.
ஒரு சில வங்கிகள் மொபைல் எண்ணை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. சில வங்கிகள் கூடுதல் பாதுகாப்பிற்காக, பிறந்த தேதியை சமர்ப்பிக்கக் கேட்கலாம்.
இதேபோலவே, வங்கியின் வாடிக்கையாளர் எனில், நெட் பாங்கிங் வசதி மூலமும் கடன் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். கடன் பகுதியில் இதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதே முறையில் கடனுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். வீட்டுக்கடனில் திட்டமிடுதல் முக்கியமாக அமைவதால் கடன் நிலையை அறிந்து கொள்வது அவசியம்.