தேவையற்ற பொருட்களை வாங்குவதை கட்டுப்படுத்துவது எப்படி?
தேவையற்ற பொருட்களை வாங்குவதை கட்டுப்படுத்துவது எப்படி?
ADDED : டிச 16, 2024 12:43 AM

பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இப்படி யோசிக்காமல் வாங்கும் பொருட்களில் பல, பெரும்பாலும் தேவையற்றதாக அமையலாம். வாங்கும் போது இருக்கும் ஆர்வமும், திருப்தியும், பொருட்களை வாங்கிய பின் காணாமல் போகலாம்.
உபரி வருமானம் கொண்ட பெரும்பாலானோருக்கு இந்த பழக்கம் அதிகம் இருப்பதாக நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். கிரெடிட் கார்டு வசதியும் ஒரு காரணமாகிறது. பணம் வீணாவதோடு, வீட்டிலும் பயனற்ற பொருட்களை அதிகரிக்கும் இந்த பழக்கத்தை கட்டுப்படுத்தும் வழிகளை பார்க்கலாம்.
அடிப்படை காரணம்:
முதலில் தேவையற்ற பொருட்களை வாங்கும் பழக்கம் இருப்பதை உணருங்கள். பல நேரங்களில் அந்தஸ்திற்காக பொருட்களை வாங்க விரும்பலாம். மேலும், பொருட்களை வாங்குவது ஒருவிதமான தற்காலிக நிறைவை அளிக்கலாம். இந்த பழக்கத்தை அங்கீகரிப்பதே, இதில் இருந்து விடுபடுவதற்கான முதல் வழி.
பட்ஜெட் முக்கியம்:
திட்டமிடுவதன் பலனை பலரும் உணராமல் இருப்பதே பிரச்னைக்கு இன்னொரு முக்கிய காரணம்.பட்ஜெட்டை வகுத்துக்கொண்டு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயாரித்து வைத்திருப்பது வழிகாட்டும். பட்ஜெட்டிற்கு ஏற்ப வாங்கும் பழக்கம் இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
தள்ளிப்போடுங்கள்:
பார்த்தவுடன் பொருட்களை வாங்கி, பின்னர் வருந்துவதை தவிர்க்க சிறந்த வழி, நினைத்ததும் வாங்காமல் தள்ளிப்போடுவது தான். ஒரு சில நாட்கள் தாமதித்த பிறகும் அந்த பொருள் தேவை என தோன்றினால் வாங்கலாம். ஆனால், இதற்குள் அந்த ஆர்வமே காணாமல் போயிருக்கும்.
கார்டு கட்டுப்பாடு:
நினைத்ததும் பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு வசதியும் ஒரு காரணமாகலாம்.
கார்டு பயன்பாட்டில் கட்டுப்பாடு தேவை. கிரெடிட் கார்டு மூலம் செலவிட வரம்பு நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.அத்தியாவசிய தேவை இல்லை எனில், கிரெடிட் கார்டை எடுத்து செல்லாதீர்கள்.
மால் விஜயங்கள்:
ஷாப்பிங் மால்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்ப்பதும் நல்லது. மால்களில் தள்ளுபடி அறிவிப்புகளும்,சலுகைகளும் கவர்ந்திழுக்கலாம். ஆனால், அந்தபொருட்கள் உண்மையில் உங்களுக்கு தேவையற்றவையாக இருக்கலாம். எனவே, பொழுதை கழிக்க மால்களுக்கு பதில்
பூங்காவிற்கு செல்லலாம்.

