வீட்டுக்கடன் பெற சரியான நேரத்தை தீர்மானிப்பது எப்படி?
வீட்டுக்கடன் பெற சரியான நேரத்தை தீர்மானிப்பது எப்படி?
ADDED : பிப் 19, 2024 12:10 AM

சொந்த வீடு வாங்க தீர்மானிப்பது முக்கிய மைல்கல்லாக திகழ்வதோடு உற்சாகமும், சிக்கலும் நிறைந்த ஒன்றாக அமைகிறது. ஏனெனில் வீட்டுக்கடன் வசதியை நாடும் போது, வட்டி விகித போக்கும், வீட்டின் விலையும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
தற்போதைய வட்டி விகிதத்தில் கடன் பெறுவதா அல்லது வட்டி விகிதம் குறையும் வரை காத்திருந்து பலன் பெறுவதா? எனும் குழப்பம் பலருக்கு இருக்கலாம். எனினும், வீட்டுக்கடன் பெறும் போது வட்டி விகிதம் தவிர, தொடர்புடைய மற்ற அம்சங்களையும் மனதில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
தயார் நிலை:
வீட்டுக்கடன் பெற முயலும் போது, நிதி தயார் நிலை முக்கியம். வீட்டின் மதிப்பில், 20 சதவீத தொகையை கடன் பெறுபவர்கள் செலுத்த வேண்டும் என வங்கிகள்
நிர்ப்பந்திக்கின்றன. இது, கடன் சுமையை குறைக்கவும் உதவும். எனவே, முதலில் செலுத்த வேண்டிய தொகையை தயார் செய்து கொள்ள வேண்டும்.
கடன் பொறுப்புகள்:
வீட்டுக்கடன் என்பது நீண்ட கால பொறுப்பு. பல ஆண்டுகளுக்கு மாதத் தவணையை செலுத்த வேண்டும். ஏற்கனவே வேறு கடன்களுக்கான தவணை இருந்தால், தவணை சுமை அதிகரிக்கலாம். எனவே, மற்ற கடன் பொறுப்புகளை குறைத்துவிட்டு, வீட்டுக்கடன் வசதியை நாடுவது ஏற்றது.
வீட்டின் விலை:
வட்டி விகித சூழலுக்கு ஏற்ப, வட்டி குறையும் வரை காத்திருக்கலாம் என்பது நல்ல உத்தி தான். ஆனால், வட்டி குறைய காத்திருக்கும் காலத்தில் வீட்டின் விலை உயரும் வாய்ப்புள்ளதையும் மறந்துவிடக்கூடாது. இந்த உயர்வு, வட்டி விகித குறைவு பலனை பாதிக்கும்.
கிரெடிட் ஸ்கோர்:
வீட்டுக்கடன் செயல்முறையில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடனுக்கு விண்ணப்பிப்பவரின் கடன் தகுதியை உணர்த்தும் முக்கிய அம்சமாக இது அமைகிறது.
அதிக ஸ்கோர் இருந்தால், கடன் எளிதாக கிடைப்பதோடு, வட்டி விகிதமும் சாதகமாக அமையலாம்.
நிதி சூழல்:
வட்டி விகித சூழலும், சந்தை நிலையும் முக்கியம் என்றாலும், வீடு வாங்கும் போது அதற்கான தயார் நிலையே முக்கியம். வீடு வாங்க சரியான நேரம் என்பது, ஒவ்வொருவரது நிதி சூழல் மற்றும் இலக்குகள் சார்ந்தே அமையும். இதற்கு முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

