ADDED : ஜன 29, 2024 01:07 AM

வாகன கடன் பெறும் போது, எந்த அளவு கடன் பெறலாம் என்பதை அறிந்திருப்பது கடனை எளிதாக திரும்ப அடைக்க வழிகாட்டும்.
வீட்டுக்கடன் வசதி போலவே வாகன கடன் வசதியும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீட்டுக்கடன் தொடர்பாக முடிவு எடுப்பது போலவே, கார் கடன் பெறுவது தொடர்பாக தீர்மானிப்பதும் முக்கிய நிதி முடிவாக அமைகிறது.
நவீன வாழ்வியல் வசதிக்கு ஏற்ப கார் வாங்கும் தேவை அதிகரித்திருந்தாலும், கார் கடன் பெறும் போது, வாங்கிய கடனை சிக்கல் இல்லாமல் திரும்ப அடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எந்த அளவு கார் கடன் பெறலாம் என முடிவெடுப்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வங்கி கடன்
புதிய கார் வாங்க வங்கிகள் கடன் வசதி அளிக்கின்றன. இவைத் தவிர வங்கிசாரா நிதி நிறுவனங்களும் கார் கடன் அளிக்கின்றன.
புதிய கார் தவிர பயன்படுத்திய கார் வாங்கவும் கடன் வசதி அளிக்கப் படுகிறது. மேலும், சந்தையில் பல்வேறு விலைப்பிரிவில் பல விதமான கார்களும் இருக்கின்றன.
இந்த நிலையில் எந்த கார் வாங்கலாம் என்பதும், எந்த விலையில் வாங்கலாம் என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எந்த காரை வாங்க தீர்மானித்தாலும், அதன் விலை பொருத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வங்கிகளை பொருத்தவரை, பொதுவாக புதிய கார் வாங்க, விலையில் 80 சதவீதம் வரை கடனாக அளிக்க முன்வருகின்றன.
ஒரு சில வங்கிகள் முழுத்தொகையையும் கூட கடனாக அளிக்கின்றன. கடனுக்கும், காருக்குமான மதிப்பு இடையிலான விகிதம் கணக்கிடப்படும் முறைக்கு ஏற்ப இது அமைகிறது.
கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதிக்கு ஏற்ப வங்கிகள் எளிதாக கடன் வழங்கினாலும், கடன் பெறுபவர்கள் தங்களது திரும்ப செலுத்தும் தன்மையை முக்கியமாக கருதி முடிவு எடுக்க வேண்டும்.
எளிய கணக்கு
கார் கடன் பெறும் போது, கடனுக்கான கால அவகாசம் மற்றும் மாதத்தவணை ஆகிய அம்சங்கள் முக்கியமாக கவனிக்கப்படுகின்றன.
பொதுவாக, ஏழு ஆண்டுகள் வரை கடன் காலம் அளிக்கப்பட்டாலும் கூட, குறைவான கால அளவை தேர்வு செய்வது நல்லது என வலியுறுத்தப்படுகிறது.
குறைவான காலத்தை நாடும் போது மாதத்தவணை அதிகமாக இருந்தாலும், வட்டியாக செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருக்காது. நீண்ட காலத்தை நாடும் போது, மாதத்தவணை குறைவாக அமைந்தாலும், வட்டியாக அதிக தொகை செலுத்த வேண்டிஇருக்கும்.
எனினும், மாதத்தவணை மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இல்லாமலும் இருப்பது அவசியம். மற்ற நிதி பொறுப்புகள் மீதும் இது தாக்கம் செலுத்தலாம்.
இந்த சிக்கலை சமாளிக்க, எளிதான ஒரு வழியை வல்லுனர்கள் முன்வைக்கின்றனர். அதாவது கார் விலையில், 20 சதவீத தொகையை செலுத்தி விட்டு, எஞ்சிய தொகையை கடனாக பெற வேண்டும். அந்த தொகையை திரும்ப செலுத்தும் காலம் நான்கு ஆண்டுகளுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
மேலும் மாதத்தவணை தொகை மாத வருமானத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிதி சூழலுக்கு ஏற்ப இது மாறுபடக்கூடியது என்றாலும், கார் கடனை சிறந்த முறையில் நிர்வகிக்க வழிகாட்டுவதாக அமையும்.