துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் ஹெச்.டி.ஹூண்டாய் ஒப்பந்தம் மதுரை தொழில் மாநாட்டில் கையெழுத்து
துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் ஹெச்.டி.ஹூண்டாய் ஒப்பந்தம் மதுரை தொழில் மாநாட்டில் கையெழுத்து
ADDED : டிச 09, 2025 01:26 AM

மதுரை: துாத்துக்குடியில் 18,000 கோடி ரூபாய் மதிப்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான, தென்கொரியாவின் ஹெச்.டி. ஹூண்டாய், துாத்துக்குடியில் சுமார் 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப் பெரிய கப்பல் கட்டும் தளம் அமைக்க உள்ளது.
மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2025ல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா, மற்றும் ஹெச்.டி.கே.எஸ்.ஓ.இ., நிறுவனத்தின் அதிகாரி கள் முன்னிலையில் கையெழுத்தானது.
கொச்சி ஷிப்யார்டு மற்றும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள், துாத்துக்குடியில் மொத்தம் 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், ஹெச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களின் திட்டங்களும் சேர்ந்து, சுமார் 55,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முயற்சி மற்றும் துரிதமான ஒருங்கிணைப்பு பணிகள், ஹூண்டாய் முதலீட்டை ஈர்க்க முக்கிய காரணமாக இருந்ததாக, இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகத் தரத்திலான கப்பல் கட்டுமான மையம் அமைக்க தேவையான காலநிலை மற்றும் புவியியல் சூழ்நிலைகள் துாத்துக்குடியில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வலுவான துறைமுக வசதிகள் மற்றும் மாநிலத்தின் பரந்த கடற்கரை தங்கள் விரிவாக்கத்துக்கு உதவுவதாகவும் அவர்கள் கூறினர்.
நீண்டகால கப்பல் கட்டுமான செயல்பாட்டுக்கு தேவையான நம்பகத்தன்மை, விரிவாக்கத்தன்மையை அதிகரிக்கிறது பல துறைகளுடன் தொடர்பு, அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் தன்மை கொண்ட கப்பல் கட்டுமான துறை, தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் கடந்த 2021 முதல் தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் மட்டும் 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10 லட்சத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கும் துாத்துக்குடி மாவட்டத்தை ஒரு முக்கிய தொழில்துறை மற்றும் கடல்சார் மையமாக மேலும் வலுப்படுத்துகிறது இந்த மூன்று திட்டங்கள் மொத்தமாக சுமார் 55,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

