மின் வாகன பேட்டரி தயாரிப்பு சென்னையில் ஹூண்டாய் துவக்கம்
மின் வாகன பேட்டரி தயாரிப்பு சென்னையில் ஹூண்டாய் துவக்கம்
ADDED : ஜன 21, 2025 11:50 PM

சென்னை:ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில், மின்சார வாகன பேட்டரி அசம்பிளிங் பணிகளை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி, ஐந்து ஆண்டுகளில் 5,700 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஆண்டுக்கு 75,000 பேட்டரிகளை தயாரிக்கும் திறன் கொண்டுள்ள இந்த ஆலையில், தயாரிக்கப்படும் பேட்டரிகள், நிறுவனத்தின் செலவை குறைத்து, அதன் மின்சார கார்களுக்கு பேட்டரி கிடைப்பதை உறுதி செய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் வாகனங்களுக்கு தேவையான 92 சதவீத உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரித்து அல்லது கொள்முதல் செய்து வருவதாக அதன் முழு நேர இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுமயமாக்கல் வாயிலாக கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுவனம் 5,700 கோடி ரூபாய் அன்னிய செலாவணியை சேமித்துள்ளதாகவும்; இதனால் 1,400க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.