ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் முழுமையாக அதானி வசமானது
ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் முழுமையாக அதானி வசமானது
ADDED : ஜன 17, 2024 11:25 PM

புதுடில்லி: அதானி குழுமம், ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்தின் பங்குகளை கூடுதலாக வாங்கி, அதை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது.
அதானி குழுமத்தின் துணை நிறுவனமான, 'ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ்' நிறுவனம், தனியார் செய்தி ஏஜன்சி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்., இந்தியாவின், 50.50 சதவீத பங்குகளை கடந்த மாதம் கையகப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது, அதானி குழுமம் இந்நிறுவனத்தில் அதன் பங்கு அளவை, வாக்களிக்கும் உரிமையுடன் 76 சதவீதமாகவும், வாக்குரிமை இல்லாமல் 99.26 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
அதானி குழுமம் கடந்த 2022ம் ஆண்டில், 'பி.க்யு., பிரைம் டிஜிட்டல்' செய்தி தளத்தை நடத்தி வந்த, 'குயின்டில்லியன் பிசினஸ் மீடியா' நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் வாயிலாக, ஊடக வணிகத்தில், அதானி குழுமம் நுழைந்தது. இதையடுத்து, டிசம்பரில், என்.டி.டி.வி., நிறுவனத்தில், கிட்டத்தட்ட 65 சதவீத பங்குகளையும் கையகப்படுத்தியது. ஊடகப் பிரிவில், அதானி குழுமம் தன் இருப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.