மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000 5 மடங்காக உயர்த்தியது ஐ.சி.ஐ.சி.ஐ.,
மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000 5 மடங்காக உயர்த்தியது ஐ.சி.ஐ.சி.ஐ.,
UPDATED : ஆக 10, 2025 09:03 AM
ADDED : ஆக 09, 2025 11:46 PM

புதுடில்லி:தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., இம்மாதம் 1ம் தேதிக்குப் பிறகு நகர்ப்புறங்களில் துவங்கப்பட்ட மற்றும் இனி துவங்கப்படும் சேமிப்பு கணக்குகளில், குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை, 50,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது ஜூலை மாதம் வரை, 10,000 ரூபாயாக இருந்த நிலையில், 5 மடங்கு அதிகம்.
இது குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்ட அறிவிப்பு:
புதிய குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை, நகரங்களில் 50,000 ரூபாயாகவும்; சிறிய நகரங்களில் 25,000 ரூபாயாகவும்; கிராமப்புறங்களில் 10,000 ரூபாயாகவும் இருக்கும்.
குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு, பற்றாக்குறை தொகையில் 6 சதவீதம் அல்லது 500 ரூபாய் இதில், எது குறைவோ அந்த தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
ஓய்வூதியம் பெறுவோரின் சேமிப்பு கணக்குக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு வேறு நிபந்தனைகள் என்பதால், இந்த நிபந்தனைகள் பொருந்தாது.
அதேநேரம், சேமிப்பு கணக்குகளில் ரொக்க பரிவர்த்தனை வரம்பு மாற்றமின்றி நீடிக்கிறது. இதன்படி, வங்கி கிளைகளில், மாதத்துக்கு மூன்று முறை மட்டும், ரொக்கமாக டிபாசிட் செய்வது அல்லது திரும்ப எடுப்பதற்கு இலவசமாக அனுமதிக்கப்படுவர்.
வாடிக்கையாளர் மாதத்துக்கு, 3 இலவச பரிவர்த்தனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரம்பை தாண்டும் போது, கட்டணம் செலுத்த வேண்டும். 1,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு 3.50 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளான எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகியவை, சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகையை பராமரிக்காவிட்டாலும், அபராதம் கிடையாது என அறிவித்துள்ளன.
தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., அனைவருக்கும் வங்கிச்சேவை என்பதில் இருந்து, வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கான சேவை என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.