ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவு அரசுடன் ஐ.சி.ஐ.சி.ஐ., கூட்டு
ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவு அரசுடன் ஐ.சி.ஐ.சி.ஐ., கூட்டு
ADDED : செப் 04, 2025 11:04 PM

புதுடில்லி:நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க, மத்திய அரசின் டி.பி.ஐ.ஐ.டி., எனும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக ஒரு திட்டத்தை வடிவமைத்து, ஸ்டார்ட்அப் இந்தியா இணையதளத்தில் வெளியி டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மும்பை அலுவலகத்தில், பிரத்யேக பணியிடம் கிடைக்கும். இந்நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தொழில் முன்னோடிகளால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களை பெற்று பயனடையலாம்.
மேலும், தங்களது தயாரிப்புகள் சந்தை நிலவரத்தை பிரதிபலிக்கிறதா என்பதை சரிபார்க்க, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் வணிகப் பிரிவுகளுடன் சோதனை திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். துணிகர முதலீட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
டி.பி.ஐ.ஐ.டி., அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்அப்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு ஸ்டார்ட்அப் இந்தியா உதவும்.