பரந்துார் விமான நிலையம் அருகே சிறுதொழில்களுக்கு 2 தொழிற்பேட்டை 'சிட்கோ' திட்டம்
பரந்துார் விமான நிலையம் அருகே சிறுதொழில்களுக்கு 2 தொழிற்பேட்டை 'சிட்கோ' திட்டம்
ADDED : செப் 04, 2025 10:57 PM

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள பரந்துார் விமான நிலையத்திற்கு அருகில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெற, தலா, 300 ஏக்கரில் இரு தொழிற்பேட்டைகளை அரசு அமைக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டையை, 'சிட்கோ' எனப்படும் தமிழக அரசின் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து சப்ளை செய்கின்றன.
அதில், சில நிறுவனங்கள் உள்நாட்டு சந்தைகளுக்கு தயாரிப்புகளை அனுப்புவதுடன் ஏற்றுமதியும் செய்கின்றன.
இதற்காக அந்நிறுவனங்கள், சென்னை, எண்ணுார் துறைமுகங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன.
இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள பரந்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 5,300 ஏக்கரில் பரந்துார் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, திட்ட செலவு 29,150 கோடி ரூபாயில், விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறையும், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.
பரந்துார் விமான நிலைய திட்டத்தால், சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெற, அதை ஒட்டி புதிய தொழிற்பேட்டை அமைக்க, சிட்கோ முடிவு செய்துள்ளது.
இதற்காக, திருவள்ளூர் - ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இடைப்பட்ட பகுதியில் தலா, 300 ஏக்கரில் இரு தொழிற்பேட்டைகள் அமைக்க இடங்கள் அடையாளம் காணும் பணி துவங்கப்பட்டுள்ளது.
பரந்துாரில் 29,150 கோடி ரூபாயில் புதிய விமான நிலைய பணிகள்
300 ஏக்கரில் இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்க சிட்கோ முடிவு
திருவள்ளூர், ராணிப்பேட்டை இடையே நிலங்கள் அடையாளம் காணும் பணி துவக்கம்.