'ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி., உயர்த்தினால் 1 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும்'
'ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி., உயர்த்தினால் 1 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும்'
ADDED : டிச 07, 2024 01:20 AM

புதுடில்லி:ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., விகிதம் உயர்த்தப்பட்டால், விற்பனை பாதிக்கப்பட்டு, இத்துறையில் பணியாற்றும் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் சூழல் ஏற்படும் என்று, சி.எம்.ஏ.ஐ., எனும், இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றியமைப்பதற்காக, பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் குழு, ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை உயர்த்த பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்து, சி.எம்.ஏ.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போதைய நடைமுறையின் படி, ஆடைகளுக்கு அதிகபட்சமாக 12 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 28 சதவீதம் வரை ஜி.எஸ்.டி., வசூலிக்க அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ள தகவல் உறுதியானால், இத்துறையில் சிறு, நடுத்தர நிறுவனங்களையும், பணியாளர்களையும் பெரிதாக பாதிக்கும்.
தற்போது 1,000 ரூபாய் வரையிலான ரெடிமேட் ஆடைகளுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி.,யை 1,500 ரூபாய் வரை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருப்பது, அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், 1,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான ஆடைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யை 18 சதவீதமாகவும்; 10,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 28 சதவீதமாகவும் உயர்த்துவது, நடுத்தர மக்களை பாதிக்கும்.
வாடிக்கையாளர்களில் பெரும் பகுதி இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் தேவை குறைந்தால், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, ஜவுளித் துறையின் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் சூழல் ஏற்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.