ADDED : ஜூலை 31, 2026 06:45 AM

சென்னை: ஐ.எச்.சி.எல்., எனப்படும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட், திருச்சியில், 'கேட்வே' நட்சத்திர ஹோட்டல் அமைக்க, 'டிரை ஆலம் ஹோட்டல்ஸ்' உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மொத்தம் 176 அறைகளுடன் அமைக்கப்படும் இந்த ஹோட்டல், காவிரி ஆறு, மலைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலை காணும் வசதியை வழங்கும். வணிக மற்றும் சமூக கூட்டங்கள் நடத்த ஏற்றவாறும் வடிவமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ஐ.எச்.சி.எல்., நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டு பிரிவு செயல் துணை தலைவர் சுமா வெங்கடேஷ் கூறுகையில், ''பெருநகரங்கள், முதல்நிலை நகரங்களை தாண்டி பயண தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வணிகம், கல்வி, ஆன்மிக பயணம் ஆகியவற்றின் பன்முக கலவையாக உள்ள திருச்சி போன்ற இடங்கள், குறிப்பிடத்தக்க சந்தைகளாக உருவாகி வருகின்றன'' என்றார்.
