'உலகின் 4வது பெரிய பொருளாதாரம் நடப்பாண்டில் இந்தியா வசமாகும்' ஜப்பானை பின்னுக்கு தள்ளும் என ஐ.எம்.எப்., கணிப்பு
'உலகின் 4வது பெரிய பொருளாதாரம் நடப்பாண்டில் இந்தியா வசமாகும்' ஜப்பானை பின்னுக்கு தள்ளும் என ஐ.எம்.எப்., கணிப்பு
ADDED : ஏப் 28, 2025 12:35 AM

புதுடில்லி,:இந்தியா, நடப்பாண்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என, பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. மேலும் வரும் 2028ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு நிதியத்தின் கணிப்பு படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.20 சதவீதமாகவும்; அடுத்த ஆண்டில் 6.30 சதவீதமாகவும் இருக்கும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜப்பானிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு அந்நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துஉள்ளது.
அதோடு, ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை முன்பிருந்த 1.10 சதவீதத்திலிருந்து 0.60 சதவீதமாக குறைத்து உள்ளது.
நடப்பாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பையும், முன்பிருந்த 3.30 சதவீதத்திலிருந்து 2.80 சதவீதமாக ஐ.எம்.எப்., குறைத்துள்ளது. வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 3 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்து உள்ளது.

