எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி?
எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி?
ADDED : செப் 28, 2025 01:34 AM

புதுடில்லி:அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, எத்தனால் உற்பத்திக்காக அந்நாட்டி லிருந்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய இந்தியா முன்வந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“புதிய சலுகைகள் வழங் கப்பட்டுள்ளன. எத்தனால் உற்பத்திக்காக அமெரிக்காவிலிருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய பேச்சு நடந்து வருகிறது,” என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவிலிருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
வரும் நவம்பர் மாதத்துக்குள், இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து சோயாபீன் மற்றும் மக்காச்சோள இறக்குமதியை அதிகரிக்க, இந்தியாவை அந்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த கவலையால், இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
உள்நாட்டு விவசாயிகளின் நலன் காப்பதும், மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இந்திய சந்தைகளில் வரவிடாமல் தடுப்பதுமே முதன்மை நோக்கம் என அரசு அதிகாரி கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இருதரப்பு உறவில் சமீபத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை கருத்தில் கொள்ளாமல், வர்த்தக ஒப்பந்தத்தை விரை வில் நிறைவேற்ற இரு நாட்டு பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகவே இந்த வாரம் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் அமெரிக்கா சென்று விவாதங்களில் பங்கேற்றார். ஒவ்வொரு கட்டமாக பேச்சு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த கட்டம் எப்போது நடைபெறும் என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை.