ADDED : பிப் 13, 2024 05:00 AM
புதுடில்லி : நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த ஜனவரியில், 28 சதவீதம் சரிந்து 12 லட்சம் டன்னாக குறைந்துள்ளதாக சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு எண்ணெய் ஆண்டின் முதல் காலாண்டான நவம்பர் முதல் ஜனவரி காலகட்டத்திலான மொத்த இறக்குமதி, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 47.73 லட்சம் டன்னில் இருந்து, 23 சதவீதம் குறைந்து, 36.73 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், பாமாயில் 7.83 லட்சம் டன்னாகவும், 'சாப்ட்' ஆயில் 4.09 லட்சம் டன்னாகவும் இருந்தது.
இம்மாதம் முதல் தேதி நிலவரப்படி, மொத்த சமையல் எண்ணெய்கள் கையிருப்பு 26.49 லட்சம் டன்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும், 7.64 சதவீதம் குறைவாகும்.
குறைந்த உற்பத்தி, உலகப் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் வினியோகத் தடைகள் போன்ற காரணங்களால், தற்போது குறைவாக உள்ள சமையல் எண்ணெய்களின் விலைகள் இந்த ஆண்டு உயரக்கூடும்.
இவ்வாறு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.