புதிய வருமான வரி சட்டத்தில் 45 நாளில் 'பேமென்ட்' கட்டாயம் 'லகு உத்யோக் பாரதி' வலியுறுத்தல்
புதிய வருமான வரி சட்டத்தில் 45 நாளில் 'பேமென்ட்' கட்டாயம் 'லகு உத்யோக் பாரதி' வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2025 12:02 AM

திருப்பூர்:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, 45 நாளில் கட்டணங்களை செலுத்துவது புதிய வருமான வரி சட்டத்தில் கட்டாயமாக்கப்பட வேண்டு மென, 'லகு உத்யோக் பாரதி' வலியுறுத்தியுள்ளது.
சிறு தொழில்களை நடத்துவோர், உற்பத்தி மற்றும் சேவைக்கான கட்டணத்தை, குறித்த காலத்தில் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, 45 நாட்களுக்குள் கட்டணத்தை பட்டுவாடா செய்ய வேண்டுமென கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.
உற்பத்தி நிறுவனம் தன் 'ஜாப் ஒர்க்' சேவைக்கான கட்டணத்தை, 45 நாட்களுக்குள் செலுத்தாதபட்சத்தில், அந்த கட்டணத் தொகையை, செலவு கணக்கில் காண்பிக்க முடியாது.
மாறாக, செலுத்தப்படாத கட்டணத் தொகை லாபமாகக் கருதி, வருமான வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் என வருமான வரி சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
மத்திய அரசு புதிய வருமான வரி மசோதாவை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஜாப் ஒர்க் தொழில்களுக்கான கட்டணம், 45 நாட்களுக்குள் கிடைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கடிதம் குறித்து, லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம், துணைத் தலைவர் ஹரிஹரன் ராமமூர்த்தி கூறியதாவது:
புதிய வருமான வரி சட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கட்டணம், 45 நாட்களுக்குள் வழங்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்.
பெரிய நிறுவனங்கள், கொடுக்கப்படாத கட்டணத்தை செலவு கணக்கில் காண்பிக்க அனுமதிக்கக் கூடாது. செலுத்தப்படாத கட்டணத்தை வருவாயாக கருத வேண்டும்.
கட்டணத்தை தாமதப்படுத்தினால், அபராதம் விதிக்கவும் வழி செய்ய வேண்டும். கொடுக்கப்பட வேண்டிய கட்டண வசூலில் ஏற்படும் பிரச்னை களுக்கு தீர்வு காண, பிரத்யேக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.