தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ உற்பத்தி உயர, ஊக்கத்தொகை மட்டுமே கைகொடுக்காது

 உற்பத்தி உயர, ஊக்கத்தொகை மட்டுமே கைகொடுக்காது

 உற்பத்தி உயர, ஊக்கத்தொகை மட்டுமே கைகொடுக்காது


ADDED : ஆக 03, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தொழில் கொள்கையை கவனித்து பார்த்தால், ஒரு தெளிவான போக்கு தெரியும். செமிகண்டக்டர்கள், பேட்டரி சேமிப்பு அமைப்புகள், மின்னணு சாதனங்கள், பாதுகாப்பு தளவாடங்கள், சூரிய மின் தகடுகள் என எந்த துறையாக இருந்தாலும், அவற்றை வெறுமனே பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்க விரும்பவில்லை. அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நாடாக மாறுவதே மத்திய அரசின் இலக்காக உள்ளது.

இந்த இலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில், பி.எல்.ஐ., எனும் 'உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை' திட்டங்களின்கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடுகிறது. அதன்படி, இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்து, ஆண்டுதோறும் விற்பனையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.

இதுமட்டுமின்றி, சில பொருட்களுக்கான சுங்க வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சில இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு, உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுடனும் இணைந்துள்ளது. 'சீனா பிளஸ் ஒன்' உத்தியின்கீழ், உலக நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு மாற்ற முயன்று வருகின்றன. இதனால், பத்தாண்டுக்கு முன்பு கிடைக்காத முதலீட்டு வாய்ப்புகளை தற்போது இந்தியா பெறும் சூழல் உருவாகியுள்ளது.

புதிய உத்தி ஒரு அரசு விரும்புவதால் மட்டுமே தொழிற்சாலைகள் ஓர் இரவில் உருவாகிவிடாது. அதேபோல், அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் நிலையான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே தனியார் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்யும். அதனால்தான், தொழில் கொள்கை என்பது மானியம் வழங்குவதைவிட மிகவும் சிக்கலானதாக மாறுகிறது.

உயர் தொழில்நுட்ப சோலார் வேபர் உற்பத்தி ஆலையையே எடுத்து கொள்ளலாம். அது, சில்லரை விற்பனை கடைகள் தொடங்குவதை போன்ற எளிய விஷயம் அல்ல. அதற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு, மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம், சிறப்பு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள், பல ஆண்டுகள் கட்டுமான பணிகள் ஆகியவை தேவை.

அதுமட்டுமின்றி, ஆலை செயல்படத் தொடங்கிய பிறகும், அதன் உற்பத்திக்கு தொடர்ந்து சந்தை இருக்கும் என்ற முழு நம்பிக்கையும் அவசியம். அதே நேரத்தில் உலக சந்தையில் விலை குறையும்போதெல்லாம், சூரிய மின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் குறைந்த விலையில் சீனாவில் இருந்து சோலார் வேபர்கள் மற்றும் செல்களை தடையின்றி இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலை தொடர்ந்தால் உள்நாட்டு நிறுவனங்கள் ஆயி ரக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்யாது.

ஏனெனில், ஊக்கத்தொகை மட்டும் இத்துறைக்கு போதாது. நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உள்நாட்டில் நிலையான சந்தையும் தேவை. எனவேதான் அந்த உற்பத்தி பொருட்களுக்கான தேவையையும் அரசே உருவாக்க முயல்கிறது. பி.எல்.ஐ., திட்டங்கள், நிறுவனங்களின் உற்பத்தி செலவை குறைக்க உதவுகின்றன. ஆனால், ஒரு நிறுவனம் உண்மையில் அதிகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும். உண்மையான உற்பத்தி மற்றும் விற்பனைக்கே அரசு அச்சலுகையை வழங்குகிறது.

அதேநேரத்தில், இறக்குமதி சுங்க வரிகள் உயர்த்தப்படுவதன் வாயிலாக, உள்நாட்டு பொருட்களுக்கும் இறக்குமதி பொருட்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் குறைக்கப்படுகிறது. அரசின் கொள்முதல் திட்டங்கள் ஆரம்பக்கட்டத்தில் பெரிய அளவிலான ஆர்டர்களை உறுதி செய்கின்றன. சமீபத்தில் சூரிய மின் செல்கள் தொடர்பான விதி முறையை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்தது.

இந்தியாவுக்கு சாதகம் நம் நாட்டை பொறுத்தவரை, காலம் சா தகமாக அமைந்துள்ளது. உலக நிறுவனங்கள் தங்களின் விநியோக தொடரை சீனாவிலிருந்து மாற்றுவதற்கான மாற்று இடங்களை தேடி வருகின்றன. எனினும், சில பாதக அம்சங்களும் உள்ளன. பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு சந்தை உருவாகும்போது, ஆரோக்கியமான போட்டி குறையலாம்.

நுகர்வோருக்கு விலை அதிகரிக்கலாம். மேலும், நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தாமல், அரசின் ஆதரவையே அதிகமாக நம்பும் நிலையும் உருவாகலாம்.

உள்நாட்டு சந்தை போதுமான அளவு பெரிதாக இல்லாவிட்டால், அரசு அதிக ஊக்கத்தொகை வழங்கினாலும் நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியை அடைவது கடினம்.

எனவே, வர்த்தக பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்கா லிகமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே கொள்கை வகுப்பாளர்களுக்கு உள்ள மிகப்பெரிய சவால். இல்லையெனில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை பெறுவதில் அல்ல, அரசு மானியங்களை பெறுவதிலேயே திறமை பெற்றுவிடும் அபாயம் உள்ளது.

போட்டி நாடுகள் வரலாற்றைப் பார்த்தால், பல நாடுகள், புதிய தொழில்துறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. தென் கொரியா, தனது கப்பல் கட்டும் தொழில் மற்றும் மின்னணு நிறுவனங்களை மானிய கடன்கள் வாயிலாக வளர்த்தது.

அவற்றுக்கு ஏற்றுமதி இலக்குகளை எட்ட வேண்டும், குறிப்பிட்ட செயல்திறன் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன போன்ற கடுமையான நிபந்தனைகள் உண்டு.

தைவானும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்நாடு, ஆராய்ச்சி நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்தது. மேலும், செமிகண்டக்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக சின்சு அறிவியல் பூங்காவை உருவாக்கியது. இதன் வாயிலாக, டி.எஸ்.எம்.சி. போன்ற உலக முன்னணி நிறுவனங்கள் உருவாக ஏற்ற தொழில் சூழல் அமைக்கப்பட்டது.

அதேநேரத்தில், பொருளாதார வரலாறு மற்றொரு பாடத்தையும் கற்று தருகிறது. அரசின் கொள்கைகள் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்த முடியும். ஆனால், தொழில்முனைவு எண்ணத்தை புதிதாக உருவாக்க முடியாது. அது, நிறுவனங்களின் பொறுப்பு.

இறுதியாக, இந்திய நிறுவனங்கள் அரசின் கொள்கை ஆதரவால் மட்டுமல்ல ; தங்களது பொருட்களின் தரம், விலை மற்றும் மதிப்பின் அடிப்படையில் உலக சந்தையில் வாடிக்கையாளர்களை வெல்லும் நிலையை அடைய வேண்டும். அதுவே நம்நாட்டின் தொழில் கொள்கைக்கு உண்மையான வெற்றியாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us