வருமான வரி நிலுவை வசூல் 3 மாதத்தில் ரூ.20,000 கோடி
வருமான வரி நிலுவை வசூல் 3 மாதத்தில் ரூ.20,000 கோடி
UPDATED : ஜூலை 10, 2025 07:43 AM
ADDED : ஜூலை 09, 2025 10:49 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், 20,000 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை வசூலிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட, இரண்டு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் நிலவரப்படி, வருமான வரி நிலுவை 42 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் இருந்த 10 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிகம்.
இதில், 27 லட்சம் கோடி ரூபாய் நிலுவையை மீட்க வரித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் வரித்துறைக்கு சாதகமாக தள்ளுபடி செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களில், 1.96 லட்சம் கோடி ரூபாய் நிலுவையை வசூலிப்பதற்கான வழி ஏற்பட்டுள்ளதாக வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த மார்ச் 31ம் தேதி வரை அனுப்பப்பட்ட வரி நோட்டீஸ்கள் வாயிலாக, கடந்த மாதம் 30ம் தேதி வரை, 20,000 கோடி ரூபாய் வரி நிலுவை வசூலிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.