வரி தாக்கலில் உதவ 'டாக்ஸ் அசிஸ்ட்' வருமான வரித்துறை அறிமுகம்
வரி தாக்கலில் உதவ 'டாக்ஸ் அசிஸ்ட்' வருமான வரித்துறை அறிமுகம்
ADDED : ஜூலை 03, 2025 12:24 AM

புதுடில்லி:வரி செலுத்துவோருக்கு வரி தாக்கல் செய்ய உதவவும், நோட்டீஸ்களை கையாள வழிகாட்டவும் 'டாக்ஸ் அசிஸ்ட்' என்ற பிரத்யேக சேவையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வரி தாக்கலில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் சந்தேகத்துக்குரிய வரி விலக்குகளை கண்டறிய, வருமான வரித்துறை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டாக்ஸ் அசிஸ்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நோக்கம்
வரி தாக்கலின் போது ஏற்படும் தவறுகளை திருத்திக்கொள்ள உதவுகிறது
தவறான பிரிவின் கீழ் வரி விலக்குகளை பெறுவதை தவிர்க்கச் செய்வது
உதாரணமாக 80 ஜி.ஜி.சி., என்ற பிரிவின் கீழ் தனி நபர்கள் மட்டுமே வரி விலக்கு பெற முடியும்
வணிக நிறுவனங்கள் இந்த பிரிவில் விலக்கு பெற்றால், திருத்தப்பட்ட வரி தாக்கல் செய்ய வேண்டும்
திருத்தங்களை மேற்கொள்ளவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் டாக்ஸ் அசிஸ்ட் வழிகாட்டும்.
கெடுபிடி
நடப்பாண்டிலிருந்து வரி செலுத்துவோரின் வரி விலக்கு கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கு முன், அவர் சம்பந்தப்பட்ட வங்கிகள், மியூச்சுவல் பண்டு, பணிபுரியும் அலுவலகம் உள்ளிட்டவற்றின் தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதில் ஏ.ஐ., பயன்படுத்தப்படுகிறது.
குளறுபடிகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த கணக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சூழலில் சம்பந்தப்பட்ட நபர்கள் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; இல்லையெனில் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலுக்கு வரும் செப்டம்பர் 15 கடைசி நாள்.