வாரீ எனர்ஜிஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
வாரீ எனர்ஜிஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
ADDED : நவ 19, 2025 11:50 PM
புதுடில்லி: வாரீ எனர்ஜிஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக, பங்குச்சந்தைகளில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த வாரீ எனர்ஜிஸ், நாட்டின் மிகப்பெரிய சோலார் மாட்யூல் தயாரிப்பாளராகவும், ஏற்றுமதியாளராகவும் விளங்குகிறது. சோலார் உதிரிபாகங்கள் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் துணை நிறுவனமான, 'வாரீ சோலார் அமெரிக்காஸ்' டெக்சாஸ் மாகாணத்தில் 1.60 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மாட்யூல் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், நிறுவனத்தின் இந்திய அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் வாரீ எனர்ஜிஸ் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதும் பங்குச்சந்தையில் அதன் பங்கு விலை சரிய துவங்கியது. நேற்று வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 2.89 சதவீதம் சரிந்து 3,187 ரூபாயானது. வாரீ டெக்னாலஜிஸ், வாரீ ரெனியுவபிள் டெக்னாலஜிஸ் ஆகிய துணை நிறுவனங்களின் பங்கு விலையும் சரிவு கண்டன.

