பொதுத்துறை நிறுவன சுயேச்சை இயக்குனர்கள்: காலியான 86% இடங்களை நிரப்ப அரசு தீவிரம்
பொதுத்துறை நிறுவன சுயேச்சை இயக்குனர்கள்: காலியான 86% இடங்களை நிரப்ப அரசு தீவிரம்
ADDED : ஜன 28, 2025 01:06 AM

புதுடில்லி : மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள சுயேச்சை இயக்குனர் பதவிகள் எண்ணிக்கை, கடந்த டிசம்பரில் 86 சதவீதமாக அதிகரித்தது. இதனால், அப்பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில், மத்திய அரசு தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.
மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் இயக்குனர் குழுக்களில், அனுமதிக்கப்பட்டுள்ள உத்தேச சுயேச்சை இயக்குனர்களின் எண்ணிக்கை 750 ஆகும்.
இதில், டிசம்பர் 31 நிலவரப்படி, 648 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த அக்டோபரில் இது 59 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டே மாதங்களில் 86 சதவீதமாக அதிகரித்தது. சுயேச்சை இயக்குனர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இயக்குனர் குழு கூட்டங்களில், பொதுத் துறை நிறுவனத்தை வழிநடத்துவதிலும் கண்காணிப்பதிலும் சுயேச்சை இயக்குனரின் பங்களிப்பு அவசியம்.
எனவே, மொத்த காலியிடங்களில் கிட்டத்தட்ட 200 இயக்குனர்களை, விரைவாக பணியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை துவங்கியுள்ளது.
இதற்காக, பொதுத் துறை நிறுவனங்கள் சார்ந்த அரசுத் துறைகள், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் துறை, கம்பெனி விவகார அமைச்சகம் ஆகியவை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு நடைமுறையை விரைவுபடுத்துதல், தேவைப்பட்டால் குறிப்பிட்ட அளவு சுயேச்சை இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது ஆகியவை பரிசீலிக்கப்படுகின்றன.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மொத்த இயக்குனர்களில், சுயேச்சை இயக்குனர்கள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக இருப்பது கட்டாயம்
பட்டியலிடப்படாத நிறுவனங்களில் குறைந்தபட்சம் இரண்டு சுயேச்சை இயக்குனர்கள் இருக்க வேண்டும்
சுயேச்சை இயக்குனர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்; பதவி நீட்டிப்பு 3 ஆண்டுகள், ஒருமுறை மட்டுமே
மொத்த இயக்குனர்கள் 750
காலியிடங்கள்
(2024 நிலவரம்)
செப்டம்பர் 392
அக்டோபர் 441
டிசம்பர் 648

