'இந்தியா சிமென்ட்ஸ் - அல்ட்ராடெக்' கையகப்படுத்தல்: சி.சி.ஐ., நோட்டீஸ்
'இந்தியா சிமென்ட்ஸ் - அல்ட்ராடெக்' கையகப்படுத்தல்: சி.சி.ஐ., நோட்டீஸ்
ADDED : டிச 07, 2024 01:29 AM

புதுடில்லி:'இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, சி.சி.ஐ., எனும் இந்திய சந்தை போட்டி ஆணையத்திடமிருந்து நோட்டீஸ் பெற்றுள்ளதாக, 'அல்ட்ராடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் 32.72 சதவீத பங்குகளை, 3,954 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக கடந்த ஜூலையில், 'ஆதித்ய பிர்லா' குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் நிறுவனம் அறிவித்தது.
ஏற்கனவே, இதற்கு முன்னதாக 1,900 கோடி ரூபாய் மதிப்பில், நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை வாங்கியிருந்ததால், இந்த ஒப்பந்தத்துக்கு பின், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடும்.
இந்நிலையில், இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை குறித்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது எனக் கேட்டு, இந்திய சந்தை போட்டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, பங்குச் சந்தைகளுக்கு அல்ட்ராடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 15 நாட்களுக்குள் இரு தரப்பினரும் பதில் அளிக்கக் கோரி, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தங்களது தரப்பில், கொள்முதலுக்கான சரியான தகுதி இருப்பதாகவும், கையகப்படுத்தல் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அல்ட்ராடெக் தெரிவித்துள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் பிரதானமாக இயங்கி வரும் தென்னிந்திய சிமென்ட் சந்தையில், 35 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும்; தங்களது கையகப்படுத்தலால், இச்சந்தையில் போட்டித்தன்மை பாதிக்கப்படாது என்றும் அல்ட்ராடெக் தெரிவித்துள்ளது.