இந்தியா, ஐரோப்பிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் அக். , 1ல் அமல்
இந்தியா, ஐரோப்பிய நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் அக். , 1ல் அமல்
ADDED : ஜூலை 20, 2025 02:29 AM

புதுடில்லி:இந்தியா - ஐரோப்பிய நாடுகளின் இ.எப்.டி.ஏ., கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தியா, நான்கு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பான இ.எப்.டி.ஏ., இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். இரு தரப்பும், கடந்த 2024 மார்ச் 10ம் தேதி வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கூட்டமைப்பில் இருந்து 15 ஆண்டுகளுக்கு 8.50 லட்சம் கோடி ரூபாயை, இந்தியாவில் முதலீடு செய்ய உறுதிமொழி கிடைத்துள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாலு பேருக்கு நன்றி
இ.எப்.டி.ஏ., கூட்டமைப்பில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லீச்டென்ஸ்டீன் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் சுவிட்சர்லாந்து, இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக நாடாக உள்ளது. மீதமுள்ள 3 நாடுகளும் குறைந்த அளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளன. இந்தியா மற்றும் இ.எப்.டி.ஏ.,வுக்கு இடையேயான வர்த்தகம், கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் 2.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.