ஜி - 20 நாடுகளில் இந்தியாவில் தான் வேலையின்மை விகிதம் குறைவு: மன்சுக்
ஜி - 20 நாடுகளில் இந்தியாவில் தான் வேலையின்மை விகிதம் குறைவு: மன்சுக்
ADDED : செப் 08, 2025 10:50 PM

புதுடில்லி : உலக பொருளாதார மன்றத்தின் தரவுகளின் படி, 'ஜி - 20' நாடுகளிலேயே இந்தியாவின் வேலையின்மை விகிதம் தான் மிகவும் குறைவு என, மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் வழிகாட்டி நிறுவனமான 'மென்டார் டுகெதர்' மற்றும் ஆன்லைன் விளம்பரதாரர் நிறுவனமான 'குவிக்கர்' உடன் மத்திய தொழிலாளர் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
என்.சி.எஸ்., எனும் தேசிய வேலைவாய்ப்பு சேவை தளத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இளையோருக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பேசியதாவது:
நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சியோடு சேர்த்து, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வேலையின்மை விகிதம் இரண்டு சதவீதம் என, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது. ஜி - 20 நாடுகளிலேயே இது தான் மிகவும் குறைவு.
தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்கள், வேலை தேடுபவர்களுக்கு உகந்த வேலை கிடைப்பதையும், முறையான வழிகாட்டுதல்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும். தேசிய வேலைவாய்ப்பு தளத்தில், தற்போது 44 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளன.
கடந்த ஓர் ஆண்டில், அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட 10 முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 5 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு கடந்த 15 மாதங்களில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், 4.10 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேசிய வேலைவாய்ப்பு தளத்தில், தற்போது 44 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களால் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன