கடும் சவால்களை சமாளித்து வளர்ச்சி காண்கிறது இந்தியா ஐ.நா., அமைப்பின் அறிக்கையில் தகவல்
கடும் சவால்களை சமாளித்து வளர்ச்சி காண்கிறது இந்தியா ஐ.நா., அமைப்பின் அறிக்கையில் தகவல்
ADDED : மார் 17, 2025 12:23 AM

ஜெனீவா,:நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில், வர்த்தக விரிவாக்கத்தில் இந்தியா சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாக ஐ.நா.,வின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
மார்ச் முதல் வாரம் வரையிலான தரவுகளில், உலகளாவிய வர்த்தகம், 2024ல் 1.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி கண்டு, ஒட்டுமொத்தமாக 33 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. சேவைகள் துறை 9 சதவீதமும், சரக்குகள் வர்த்தகம் 2 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
தொடர் வளர்ச்சி
உலகளவில் வளர்ந்த நாடுகள் வர்த்தக வளர்ச்சியில் தொய்வை கண்டு வரும் நிலையில், வளரும் நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை சராசரிக்கும் அதிகமான சிறப்பான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
நான்காவது காலாண்டில், அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும், இந்தியா மற்றும் சீனா வலுவான வர்த்தக வளர்ச்சி கண்டுள்ளன. சரக்கு வர்த்தகத்தை பொறுத்தவரை, வளர்ந்த நாடுகளில் கலவையான சூழல் நீடிக்கிறது. ஆனால், ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
பெரிய பொருளாதார நாடுகளுள் ஒன்றான தென்கொரியா, ஏற்றுமதி வளர்ச்சி கடும் சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளர்ச்சி நேர்மறையாகவும், ஏற்றுமதி வளர்ச்சி எதிர்மறையாகவும் உள்ளது.
காலாண்டு மற்றும் ஆண்டு முறையே ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதி வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.
இந்தியாவின் சரக்கு வர்த்தகம், நான்காவது காலாண்டு இறக்குமதி வளர்ச்சி 8 சதவீதமாகவும்; ஆண்டு இறக்குமதி வளர்ச்சி 6 சதவீதமாகவும் உள்ளது.
காலாண்டு ஏற்றுமதி வளர்ச்சி 7 சதவீதமாகவும், ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சி 2 சதவீதமாகவும் உள்ளன. சேவைகள் துறை தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது.
வர்த்தகம் பாதிப்பு
உலகளாவிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, வரும் காலாண்டுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நடப்பாண்டின் முதல் மாதத்தில் ஷாங்காய் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களுக்கான தேவை குறைந்தது இதை வெளிப்படுத்துகிறது. மேலும், உலகளவில் இடைநிலை மூலப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தேவை கணிசமாக குறைந்து இருப்பது, அமெரிக்காவின் வர்த்தக கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புவிசார் சவால்கள் தொடர்வது, உலகளாவிய வர்த்தக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.