ADDED : ஏப் 08, 2025 11:47 PM

புதுடில்லி:காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக 'எம்பர்' நிறுவனத்தின், 'குளோபல் எலக்ட்ரிசிட்டி' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்து ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முன்னேறியுள்ளது.
கடந்தாண்டு இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரத்தின் பங்கு 10 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதன் பங்கு 15 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில், கார்பன் வெளியேற்றம் இல்லாமல் துாய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க வழிகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பங்கு, கடந்தாண்டு 22 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரத்தின் பங்கு 10 சதவீதமாகவும்; நீர் மின்சாரத்தின் பங்கு 8 சதவீதமாகவும் உள்ளது.
இந்தியாவின் சூரிய சக்தி மின் உற்பத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் 7 சதவீதமாக இரட்டிப்பாகிஉள்ளது.
கடந்தாண்டு உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில், புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு மின்சாரத்தின் பங்கு 40.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.