விமான பழுதுபார்ப்பு, பராமரிப்பில் கைகோர்க்கும் இந்தியா, சிங்கப்பூர்
விமான பழுதுபார்ப்பு, பராமரிப்பில் கைகோர்க்கும் இந்தியா, சிங்கப்பூர்
ADDED : செப் 07, 2025 01:52 AM

புதுடில்லி:சிவில் விமான போக்குவரத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் ஆர்வம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதுகுறித்து வெளியுறவு அமைச்சக செயலர் குமரன் தெரிவித்ததாவது:
நம் நாட்டின் சிவில் விமான போக்குவரத்தில், விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இணைந்து செயல்பட சிங்கப்பூர் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா, சிங்கப்பூர் நகரங்கள் இடையே விமான போக்குவரத்து, விமானங்கள் எண்ணிக்கை, விமான சேவைக்கான நகரங்கள் ஆகியவற்றில் ஒத்துழைக்கவும் இருநாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு தொழிலில் சிங்கப்பூருக்கு அதிக நிபுணத்துவம் உள்ளது. எனவே, அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றினால், நம் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து பயன்பெறும்.
இதற்காக, டாடா குழுமமும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.ஐ.ஏ., இன்ஜினியரிங் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளன.
சிங்கப்பூர் பிரதமரின் இந்திய பயணத்தின்போது முக்கிய துறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பசுமை மற்றும் மின்னணு கப்பல் வழித்தடம், விண்வெளி, மின்னணு சொத்து உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் ஒப்பந்தமும் அதில் அடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.