இலங்கையில் எரிசக்தி மையம் இந்தியா - யு.ஏ.இ., ஒப்பந்தம்
இலங்கையில் எரிசக்தி மையம் இந்தியா - யு.ஏ.இ., ஒப்பந்தம்
ADDED : ஏப் 26, 2025 12:16 AM

புதுடில்லி:புதிய எரிசக்தி மையம் அமைப்பது குறித்து, மே மாதம் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இலங்கை பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு துறைமுக நகரமான திரிகோணமலைக்கு அருகே, புதிய எரிசக்தி மையம் அமைப்பது தொடர்பாக, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மையத்தில் எண்ணெய் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. சமீபத்தில், பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்த போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கை அரசு நடத்தும் சிலோன் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஏ.டி., போர்ட்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கையில் சந்தித்து, இம்மையத்திற்கான விரிவான வணிக திட்டம் குறித்து பேச்சு நடத்த உள்ளதாக, அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சக செயலர் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிடவும், விரிவான திட்டங்களை இறுதி செய்யவும் கூட்டு திட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

