'இந்தியாவுக்கு முதல் ஆண்டில் ரூ.4,060 கோடி இழப்பு ஏற்படும்'
'இந்தியாவுக்கு முதல் ஆண்டில் ரூ.4,060 கோடி இழப்பு ஏற்படும்'
ADDED : ஜூலை 28, 2025 10:56 PM

புதுடில்லி : பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும், முதல் ஆண்டில் இந்தியாவுக்கு 4,060 கோடி ரூபாய் வருவாய் இழப்பும் பிரிட்டனுக்கு 3,884 கோடி ரூபாய் வரி இழப்பும் ஏற்படும் என, ஜி.டி.ஆர்.ஐ., எனும் உலக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்தியா - பிரிட்டன் இடை யிலான வர்த்தகத்தை அடிப் படையாகக் கொண்டு, ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் ஏற்படும் சுங்க வருவாய் இழப்புகளை ஜி.டி.ஆர்.ஐ., மதிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
கடந்த நிதியாண்டில் பிரிட்டனிலிருந்து 70,520 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுஉள்ளன.
இந்நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டில், பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பில், 64 சதவீதத்துக்கான வரி விதிப்புகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்படி, முதல் ஆண்டில் இந்தியாவுக்கு 4,060 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும்.
ஒட்டுமொத்தமாக 85 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கும்; 5 சதவீத பொருட்களுக்கு வரிச் சலுகையும் வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் வரிச் சலுகைகள் அதிகரிக்கும் என்பதால், பத்தாவது ஆண்டில் வருவாய் இழப்பு 6,345 கோடி ரூபாயாக உயரக் கூடும்.
பிரிட்டனை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், இந்தியாவிலிருந்து 1.19 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. ஒப்பந்தத்தின் கீழ் 99 சதவீத இந்திய பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கியுள்ளது.
இதனால் முதல் ஆண்டில் பிரிட்டனுக்கு 3,884 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். காலப்போக்கில் இது மேலும் அதிகரிக்கக் கூடும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.