ADDED : ஜூலை 09, 2025 10:44 PM

புதுடில்லி:ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக, இந்தியரான சபி கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வரும், 58 வயதான சபி கான், தற்போது அந்நிறுவனத்தின் இயக்கத்துக்கான துணைத் தலைவராக உள்ளார்.
தலைமை இயக்க அதிகாரியாக தற்போது ஜெப் வில்லியம்ஸ் பணியாற்றும் நிலையில், அவரது பொறுப்பை சபி கான் இந்த மாத இறுதிக்குள் ஏற்க உள்ளதாக, ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் 1966ல் பிறந்த சபி கான், தன் பள்ளிப் படிப்புக்காக சிங்கப்பூர் சென்ற நிலையில், பின்னர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.
அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக, ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச வினியோக தொடர், திட்டமிடல், கொள்முதல், தயாரிப்பு, போக்குவரத்து ஆகிய பிரிவுகளை கவனித்து வருகிறார்.