ஓப்பன் ஏ.ஐ.,க்கு எதிரான வழக்கில் இந்திய நிறுவனங்கள்
ஓப்பன் ஏ.ஐ.,க்கு எதிரான வழக்கில் இந்திய நிறுவனங்கள்
ADDED : ஜன 28, 2025 01:00 AM

புதுடில்லி : ஓப்பன் ஏ.ஐ.,நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தங்களையும் இணைத்து கொள்ளுமாறு, இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன.
பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏ.ஐ.,நிறுவனத்துக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஏ.என்.ஐ., செய்தி முகமை வழக்கு தொடர்ந்திருந்தது. இதில், சர்வதேச மற்றும் இந்திய பதிப்பத்தார் அமைப்புகளும் சமீபத்தில் இணைந்தன. 'சாட்ஜிபிடி'க்கு எதிரான வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், மிகவும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்களது பதிப்புரிமை பெற்ற படைப்புகளை, அதன் பயனர்களுக்கு எளிதாக வழங்கும் அபாயம் இருப்பதை உணர்ந்து, சாட்ஜிபிடிக்கு எதிரான வழக்கில் தங்களையும் சேர்த்து கொள்ள அதானியின் என்.டி.டி.வி., முகேஷ் அம்பானியின் 'நெட்வொர்க் 18' உள்பட 20க்கும் மேற்பட்ட டிஜிட்டல் செய்தி நிறுவனங்களும் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் எழுத்தாளர்கள், செய்தி நிறுவனங்கள், இசைக் கலைஞர்கள் தங்கள் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில்நுட்ப நிறுவனங்கள், வழங்கி வருவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

