இந்திய நிறுவனத்தின் வசமானது அமெரிக்காவின் 'ஜாயிண்டு அலாய்ஸ்'
இந்திய நிறுவனத்தின் வசமானது அமெரிக்காவின் 'ஜாயிண்டு அலாய்ஸ்'
ADDED : அக் 15, 2025 02:34 AM

சென்னை, அக். 15-
அமெரிக்காவில் விண்வெளி சார்ந்த பொருட்கள் மற்றும் கருவிகளை தயாரிக்கும் நிறுவனமான 'ஜாயிண்டு அலாய்ஸ்' நிறுவன த்தை, சென்னையை சேர்ந்த 'டிரஸ்டட் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
சென்னையை தலைமையிடமாக வைத்து, 'டேஸ் குளோபல்' எனும் டிரஸ்டட் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம் விமானத் துறையில் 'பிரிசிசன் மேனுபேக்சரிங்' எனும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் செயல்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள 'ஜாயிண்டு அலாய்ஸ்' எனும் விண்வெளி துறை சார்ந்த பொருட்களை உற்பத்தியும் நிறுவனத்தை, 106 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தி உள்ளது.
இதனால் வணிக செயல்பாடுகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து 'டேஸ் குளோபல்' நிறுவனத்தின் தலைவர் சங்கர்ராமன் வைத்தியநாதன் கூறியதாவது:
அமெரிக்காவின் ஜாயிண்டு அலாய்ஸ் நிறுவனம் உற்பத்தி துறையில் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை, விரைவில் இந்தியாவிற்குள் எடுத்து வர திட்டமிட்டுள்ளோம்.
இதனால் பிரேஸிங், க்ரைன்டிங், ஷீட் மெட்டல் பேப்ரிகேஷன் போன்ற தொழில் நுட்பத்தை, நம் நாட்டில் செயல்படுத்த முடியும்.
எங்கள் நிறுவனம், இந்தியாவில் விமான பாகங்களுக்கான உற்பத்தியில், 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
'சர்பேஸ் ட்ரீட்மென்ட்' வசதியை நடப்பாண்டு டிசம்பருக்குள் துவங்க உள்ளோம். சென்னையை சுற்றி 2.5 லட்சம் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஆலை அமைக்க உள்ளோம்.
இதன் வாயிலாக விமானத்துக்கு தேவையான உதிரி பாகம் அனைத்தை யும், ஒரே இடத்தில் உற்பத்தி செய்ய முடியும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தியை மேம்படுத்தவும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.