நெய் மீதான ஜி.எஸ்.டி.,யை 5% ஆக குறைக்க வேண்டும் இந்திய பால் சங்கம் வலியுறுத்தல்
நெய் மீதான ஜி.எஸ்.டி.,யை 5% ஆக குறைக்க வேண்டும் இந்திய பால் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2025 12:40 AM

புதுடில்லி:நெய் மீதான ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என, இந்திய பால் தொழில்துறை அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரவிருக்கும் 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வெண்ணெய் மற்றும் நெய் மீதான ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என, இந்திய பால் தொழில்துறை அமைப்பினர் அரசை வலியுறுத்திஉள்ளனர்.
இதுகுறித்து ஐ.டி.ஏ., எனும் இந்திய பால் சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வருவதற்கு முன், மாநிலங்கள் உள்ளூர் வகைப்பாடுகளைப் பொறுத்து மாறுபடும் விகிதங்களில், வாட் எனும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை விதித்தன. குஜராத், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள், நெய் போன்ற பொருட்களுக்கு 4 முதல் 5.50 சதவீதம் வரை வரி விதித்தன.
தற்போதைய ஜி.எஸ்.டி.,யில், நெய் மீதான வரி 12 சதவீதமாக உள்ளது. இது முறைப்படுத்தப்பட்ட உற்பத்தியாளர்களின் லாபத்தை குறைப்பதாக உள்ளது. மேலும், கலப்பட பொருட்கள் பெரும்பாலும் வரி விதிக்கப்படாமல் செழித்து வளர்கின்றன.
இதைத் தடுக்க ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைத்தால், விலை குறைவதுடன், சுகாதாரமான, பிராண்டட் பொருட்களுக்கு மக்கள் மாற வழிவகுக்கும். மேலும், விவசாயிகளின் வருவாய் பெருகுவதோடு, போலிகளை கட்டுப்படுத்தவும் உதவும்.
இவ்வாறு கூறினார்.
இந்தியாவின் நெய் சந்தை 2024ல் 3.48 லட்சம் கோடி ரூபாய்
2033ம் ஆண்டில் 7.17 லட்சம் கோடி ரூபாயை எட்டும்
2025 - 2033ல் 8.40 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி ஏற்படும்