அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி கடந்த மாதம் 17 சதவீதம் அதிகரிப்பு சீனாவுடனான வர்த்தகமும் உயர்ந்தது
அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி கடந்த மாதம் 17 சதவீதம் அதிகரிப்பு சீனாவுடனான வர்த்தகமும் உயர்ந்தது
ADDED : ஜூன் 18, 2025 12:53 AM

புதுடில்லி:அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த மாதம் 16.93 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி 5.76 சதவீதம் குறைந்துள்ளது என, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். பின் இதை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.
டிரம்பின் இந்த முடிவால், நம் நாட்டின் ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், ஏற்றுமதியாளர்கள் அதற்குள் ஏற்றுமதியை விரைவுபடுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால், கடந்த இரண்டு மாதங்களாகவே அந்நாட்டுக்கான ஏற்றுமதிகள் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக விவாதங்களில் பங்கேற்ற மத்திய வர்த்தகத் துறையின் சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்வால் இதுகுறித்து கூறியதாவது:
இந்தியாவிலிருந்து குறைந்த அளவிலான ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது.
வாகன உதிரி பாகங்களுக்கான வரி விதிப்பை பொறுத்தவரை, அனைத்து நாடுகளுக்கும் ஒரே அளவில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், தற்போதைக்கு பாதிப்பில்லை. வரி விதிப்பு நீண்ட காலம் தொடர்ந்தாலோ; சில நாடுகள் மட்டும் விலக்கு பெற்றாலோ நமக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்காவுடனான வர்த்தக மோதலால், அந்நாட்டுக்கான சீன ஏற்றுமதிகள் கடந்த மாதம் சரிந்துள்ளன. இதை ஈடுசெய்யும் விதமாக, இந்தியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆசியான் நாடுகளுக்கு, சீனா தனது ஏற்றுமதியை திருப்பிவிட்டுள்ளது.