ADDED : நவ 01, 2024 07:20 AM

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இன்றி, சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள டீலர்களுக்கான கமிஷனை, பெட்ரோலுக்கு 65 காசு, டீசலுக்கு 44 காசு என உயர்த்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர் சேவை தரத்தை மேம்படுத்தவும், விற்பனை நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள டீலர்களுக்கான கமிஷன் உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.
தற்போது, டீலர்களுக்கு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,868.14 மற்றும் 0.875 சதவீதம் உற்பத்தி விலையில் பெட்ரோல் கமிஷனாக வழங்கப்படுகிறது.
டீசலில் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,389.35, அதன் விலையில் 0.28 சதவீதம் கமிஷனாக வழங்கப்படுகிறது.
இது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.0.65 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.44 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்ததாவது: மாநிலங்களுக்குள் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுவதால், தொலைதூரங்களில் வசிக்கும் நுகர்வோர்கள் மிகவும் பயனடைவர். சில்லறை விற்பனை விலையை உயர்த்தாமல், கமிஷன் தொகையை அதிகரித்து உள்ளதால், சில்லரை விற்பனை நிலையங்களுக்கு தினமும் வருகை தரும் 7 கோடி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவையளிக்க உதவும்.
இதனால், நாடு முழுதும் 83,000 சில்லறை விற்பனை நிலையங்களில் பணிபுரியும், 10 லட்சம் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். நாடு முழுதும் உள்ள 83,000 சில்லரை விற்பனை நிலையங்களில் பணிபுரியும், 10 லட்சம் பணியாளர்களுக்கு பலன் கிடைக்கும்