தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் 25 ஆண்டுகளாக இந்தியர்கள் முன்னிலை
தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் 25 ஆண்டுகளாக இந்தியர்கள் முன்னிலை
ADDED : ஏப் 06, 2025 12:49 AM

புதுடில்லி:வெளிநாடுகளில் பணிபுரிந்து, தங்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில், இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்கள், கடந்த 2024ம் ஆண்டில் 129.40 பில்லியன் டாலர், அதாவது 11 லட்சம் கோடி ரூபாயை தாய்நாட்டுக்கு அனுப்பி உள்ளனர். அதிகபட்சமாக, கடந்த டிசம்பரில் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை அனுப்பி உள்ளனர். தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா பெற்றுள்ளது.
தகவல் தொழில்நுட்ப புரட்சியால், இந்தியர்கள் வெளிநாடுகளில் சென்று பணிபுரிவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில், கடந்த 25 ஆண்டுகளாக இந்தியர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு பின், அதிக வருமானமிக்க நாடுகளில் வேலைவாய்ப்பு மீட்சி கண்டதால், பணம் அனுப்புவது 63 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. வரும் 2029ல், இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணம் 14 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது.

