இந்திய வெளிநாட்டு கடன் ரூ.60.50 லட்சம் கோடியானது :3 மாதங்களில் 4.30% அதிகரிப்பு
இந்திய வெளிநாட்டு கடன் ரூ.60.50 லட்சம் கோடியானது :3 மாதங்களில் 4.30% அதிகரிப்பு
ADDED : ஜன 01, 2025 07:12 AM

புதுடில்லி : நாட்டின் வெளிநாட்டு கடன், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 60.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாக, மத்திய நிதியமைச்சக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
மேலும் அதில் கூறப்பட்டு உள்ளதாவது: முந்தைய ஜூன் காலாண்டோடு ஒப்பிடுகையில், வெளிநாட்டு கடன் 2.52 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 4.3 சதவீதம் உயர்ந்து உள்ளது. கடந்தாண்டு, இதே செப்டம்பர் காலாண்டில், வெளிநாட்டு கடன் 53.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
நாட்டின் ஜி.டி.பி., விகிதத்தில் வெளிநாட்டு கடன், ஜூன் காலாண்டில் 18.8 சதவீதமாக பதிவாகி இருந்த நிலையில், செப்டம்பரில் 19.4 சதவீதமாக அதிகரித்து உள்ளது. வெளிநாட்டு கடன் மதிப்பில், அதிகபட்சமாக அமெரிக்க டாலரின் பங்கு 53.4 சதவீதமாக உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு 31.2 சதவீதமும், ஜப்பான் நாட்டின் யென் 6.6 சதவீதமும், எஸ்.டி.ஆர் 5 சதவீதமும், யூரோ 3 சதவீதம் பங்கை கொண்டுள்ளன.
வெளிநாட்டு கடன்களில் அதிகபட்சமாக கடன்களின் பங்கு 33.7 சதவீதமாக உள்ளது. கரன்சி மற்றும் டிபாசிட்டுகளின் பங்களிப்பு 23.1 சதவீதமாகவும், வர்த்தக கடன் மற்றும் முன்பணம் 18.3 சதவீதமாகவும், கடன் பத்திரங்களின் மதிப்பு 17.2 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.