ADDED : ஜூன் 01, 2025 07:23 PM

உலகில் வேகமாக வளரும் காப்பீடு சந்தையாக இந்தியா உருவாகி வருவதாகவும், இந்திய காப்பீடு சந்தை 11 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி காணும் என்றும் தெரிய வந்துள்ளது.
காப்பீடு துறையில் காணப்படும் வளர்ச்சி காரணமாக, ஆசியாவில் இரண்டாவது பெரிய காப்பீடு சந்தையாக இந்தியா உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அல்லையன்ஸ் குளோபல் காப்பீடு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய காப்பீடு சந்தை 2024ம் ஆண்டில் 10.6 சதவீத வளர்ச்சி கண்டதாகவும், முந்தைய ஆண்டு இது 7.7 சதவீதமாக இருந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. காப்பீட்டின் அனைத்து பிரிவுகளும் வளர்ச்சி கண்டாலும், மருத்துவ காப்பீடு பிரிவு அதிகபட்சமாக 20.8 சதவீத வளர்ச்சி கண்டது. ஆயுள் காப்பீடு பிரிவில் 10.6 சதவீத வளர்ச்சி உண்டானது.
காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரிப்பது மற்றும் காப்பீடு வசதி அனைத்து தரப்பினரையும் சென்றடையாதது உள்ளிட்டவை, இத்துறையின் வளர்ச்சிக்கான காரணங்களாக அமைகின்றன.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை, காலநிலை பாதிப்பு உள்ளிட்டவையும் முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்திய காப்பீடு துறையில் மேலும் வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.