துருக்கி ஏர்லைன்சுடன் தொடர்பு இண்டிகோவுக்கு 3 மாத கெடு
துருக்கி ஏர்லைன்சுடன் தொடர்பு இண்டிகோவுக்கு 3 மாத கெடு
ADDED : மே 31, 2025 10:46 PM

புதுடில்லி:துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துடனான கூட்டு வணிகத்தை மேலும் மூன்று மாதங்கள் தொடர, கடைசி நீட்டிப்பை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வழங்கியுள்ளது.
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு போயிங் 777 விமானங்களை, குத்தகை அடிப்படையில், இண்டிகோ நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இதற்கான குத்தகையை கைவிட, கடைசி வாய்ப்பாக மேலும் மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பயணியருக்கு சிரமம் ஏற்படாமல் தவிர்க்க, கால நீட்டிப்பு அளிக்கப்படுவதாக டி.ஜி.சி.ஏ., தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 31ம் தேதி வரை, துருக்கி ஏர்லைன்சின் போயிங் விமானங்களை, இரட்டை குத்தகை அடிப்படையில் இண்டிகோ பயன்படுத்த முடியும்.
இண்டிகோ நிறுவனம், ஆறு மாத கெடு நீட்டிப்பு கேட்டிருந்த நிலையில், டி.ஜி.சி.ஏ., மூன்று மாத அவகாசம் மட்டுமே வழங்கியுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின்போது, பாகிஸ்தானை ஆதரிப்பதாக துருக்கி தெரிவித்தது. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு கருதி, துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துடனான இண்டிகோவின் தொடர்பு கேள்விக்கு உள்ளானது.