தொழில்துறை ஆல்கஹால்: மாநில அரசுக்கே அதிகாரம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
தொழில்துறை ஆல்கஹால்: மாநில அரசுக்கே அதிகாரம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
ADDED : அக் 23, 2024 10:25 PM

புதுடில்லி:தொழில்துறையில் பயன்படும் ஆல்கஹால் குறித்து சட்டம் இயற்றுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே உள்ளது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணையின் 52வது விதிப்படி, தொழில்துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், அதுசார்ந்த ஆல்கஹால், தயாரிப்பு, விற்பனையை கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கே உள்ளதாக மத்திய அரசு 1997ம் ஆண்டில் அறிவித்தது.
இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அவற்றை ஒன்றாக சேர்த்து விசாரித்த உச்ச நீதிமன்றம், 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த வழக்கில், விசாரணை முடிந்து, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
முன்னதாக, மாநிலங்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களில், போதை தரக்கூடிய ஆல்கஹால் குறித்த அதிகாரம், மாநில அரசிடம் உள்ளபோது, தொழிற்சாலை ஆல்கஹால் மத்திய அரசிடம் இருந்தால், அந்த ஆல்கஹால் தவறாக பயன்படுத்தப்பட்டு உயிரிழப்புகள் நேரிடும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து, தொழிற்சாலை ஆல்கஹால் குறித்து சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தால் என்ன பிரச்னை? மாவட்டங்கள், ஊராட்சிகளில் அந்த ஆல்கஹால் காரணமாக அசம்பாவிதம் ஏற்பட்டால், மத்திய அரசு எப்படி கையாள முடியும்? என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் தலைமை நீதிபதி வினவினார்.
இதையடுத்து, அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணையின் 8வது விதியில், போதை தரக்கூடிய ஆல்கஹால் தயாரிப்பு, விற்பனை, கட்டுப்பாடு மாநில அரசின் வரம்புக்குள் வருவதால், தொழிற்சாலை ஆல்கஹாலையும் முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசையே சாரும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீதிபதி நாகரத்னா மட்டும் முரண்பட்ட தீர்ப்பை அளித்தார். போதை தரக்கூடிய ஆல்கஹால் பிரிவில் தொழிற்சாலை ஆல்கஹாலை கொண்டு வர முடியாது என அவர் கூறியுள்ளார்.
எனினும், 8-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில், தொழிற்சாலை ஆல்கஹால் தொடர்பான அதிகாரம் மாநில அரசுகளின் கைக்கு மாறியுள்ளது.