ADDED : ஆக 21, 2025 11:00 PM

புதுடில்லி:அமிர்தசரஸ் - கொல்கட்டா தொழில் வழித்தட திட்டத்தின் கீழ், ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைய உள்ள ஒருங்கிணைந்த தொழில் துறை மையத்திற்கான முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹரியானா அரசு, ஹரியானா விமான நிலைய மேம்பாட்டுக் கழகம், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாடு மற்றும் செயல்பாட்டு அறக்கட்டளை ஆகியவை, இரு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து, தேசிய தொழில் துறை வழித்தட மேம்பாட்டு அறக்கட்டளை மேற்கொண்டு வரும் 20 தொழில் துறை திட்டங்களில், ஹிசாரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த தொழில் துறை மையமும் ஒன்று. இது, 4,680 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிட்டத்தட்ட 2,988 ஏக்கர் பரப்பளவில், மஹாராஜா அக்ரசென் விமான நிலையத்துக்கு அருகில் அமைய உள்ளது.
இது செயல்பாட்டுக்கு வரும்போது, 1.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும். மேலும், இந்த மையம் உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் என்றும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.