தொழில் மனைகள் ஒதுக்கீடு இனி குலுக்கலுக்கு பதில் ஏலம் 'சிட்கோ' நிறுவனம் பரிசீலனை
தொழில் மனைகள் ஒதுக்கீடு இனி குலுக்கலுக்கு பதில் ஏலம் 'சிட்கோ' நிறுவனம் பரிசீலனை
ADDED : நவ 23, 2024 10:54 PM

சென்னை:புதிதாக அமைக்கப்படும், 'சிட்கோ' தொழிற்பேட்டையில் உள்ள மனைகளை, குலுக்கல் முறைக்கு பதில், ஏல அடிப்படையில் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் துவங்க வசதியாக, பல்வேறு உட்கட்டமைப்புகளுடன் தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' எனப்படும், தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
இந்நிறுவனம் மாநிலம் முழுதும், 130 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வருகிறது. தொழில் மனைகளுக்கு ஏக்கர் அடிப்படையில், அரசு விலை நிர்ணயம் செய்கிறது.
மனைக்கு விண்ணப்பம் செய்வோருக்கு, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுதும் நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது.
இதனால், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக புதிய தொழிற்பேட்டைக்கு இடம் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் அதற்கு அதிகம் செலவாகிறது.
இதனால், வருங்காலங்களில் புதிய தொழிற்பேட்டைகளின் மனைகளை குலுக்கல் முறைக்கு மாற்றாக, ஏல அடிப்படையில் அதிக விலை கோரும் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, அரசு பரிசீலித்து வருகிறது.
இதனால், 'சிட்கோ' நிறுவனத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதன் வாயிலாக, புதிய இடங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்கலாம் என்று அரசு கருதுகிறது.
அதேசமயம், ஏலம் அடிப்படையில் மனைகளை விற்றால், பணம் இருப்பவர் மட்டுமே பயன்பெற முடியும் என்றும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் பல தரப்பினருடன் ஆலோசித்து இறுதி முடிவை எடுக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

