ADDED : ஜூன் 30, 2026 06:45 AM

புதுடில்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, மே மாதத்தில் 5.10 சதவீதமாக உயர்ந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தயாரிப்பு துறை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மொத்த விலை குறியீட்டு முறைக்கு பதிலாக, புதிய தயாரிப்பாளர் விலை குறியீட்டு முறையின் உதவியுடன் தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் 4.90 சதவீதமாக இது இருந்த நிலையில், மே மாதத்தில் 5.10 சதவீதமாக உயர்ந்துள்ளது. தயாரிப்பு துறையில் 5.50 சதவீத வளர்ச்சியும், மின்சாரம் மற்றும் எரிவாயு வினியோக துறையில் 9.90 சதவீத வளர்ச்சியும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தயாரிப்பு துறையிலுள்ள 23 தொழில் பிரிவுகளில், 16 பிரிவுகள் நேர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
வாகனங்கள் தயாரிப்பு கிட்டத்தட்ட 14.50 சதவீதம், மின் சாதனங்கள் தயாரிப்பு 20.80 சதவீதம் மற்றும் அடிப்படை உலோகங்கள் தயாரிப்பு 4.60 சதவீதம் என நேர்மறை பங்களிப்பை அளித்தன.
