'எல்லாவற்றுக்கும் அரசை சார்ந்திருப்பதை தொழில்துறையினர் விரும்பவில்லை'
'எல்லாவற்றுக்கும் அரசை சார்ந்திருப்பதை தொழில்துறையினர் விரும்பவில்லை'
ADDED : மார் 13, 2024 12:16 AM

புதுடில்லி:“எல்லாவற்றுக்கும் அரசை சார்ந்திருப்பதை, தொழில்துறையினர் விரும்பவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த காலில் நிற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம்” என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை
மேலும், உலக வர்த்தகத்தில் மந்த நிலை மற்றும் நிச்சயமற்ற நிலைகள் இருந்த போதிலும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டைப் போலவே, அதே அளவிலேயே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஆண்டைப் போலவே, சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி இருக்கும்.
பெரும்பாலான வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்கள் சர்வதேச வர்த்தகத்தில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், நம் ஏற்றுமதியானது, அதே நிலையில் தொடர்வது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
வளர்ச்சி
உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி, சரக்கு மற்றும் சேவைகளில் கவனம் செலுத்தி வருவது, நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்த உதவும். மேலும், நம் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டை விட கணிசமாக குறையும்.
2021 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியா, தன் சர்வதேச வர்த்தகத்தில் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டிலும், 55 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளோம். இது, இரண்டு ஆண்டுகளில், 64.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற நம்பிக்கையை இந்திய ஏற்றுமதியாளர்களிடம் கொண்டு வரும் வகையில், அவர்களின் எண்ணத்தை மாற்றியுள்ளோம்.
மேலும், எல்லாவற்றுக்கும் அரசை சார்ந்து இருக்க வேண்டும் என்பதை இனி தொழில்துறையினர் விரும்பவில்லை என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில், நாட்டின் சரக்கு ஏற்றுமதி, 4.89 சதவீதம் குறைந்து, 29.38 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதி 7.01 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

