எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் வருகை அழைப்பு விடுப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் சிலருக்கு மட்டுமே அழைப்பு என தொழில்துறையினர் வருத்தம்
எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் வருகை அழைப்பு விடுப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் சிலருக்கு மட்டுமே அழைப்பு என தொழில்துறையினர் வருத்தம்
ADDED : பிப் 11, 2025 11:13 PM

சென்னை:மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., துறை சார்பில், தொழில் செய்வதை எளிதாக்கவும், சிறுதொழில் நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சக செயலர் தாஸ், தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம், மத்திய அரசின் இணை செயலர் அடீஷ் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இது குறித்து, தமிழக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு, டில்லி சென்று மத்திய அரசின் அதிகாரிகளை சந்திப்பது சிரமம். இந்த சூழலில், மத்திய செயலர், சென்னைக்கு வந்து தொழில் துறையினரை சந்திக்கிறார்.
அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சிலருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அநியாயம்.
உரிய அவகாசம் கொடுத்து, அனைத்து மாவட்ட தொழில் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தால், தமிழகம் முழுதும் தொழிலில் நிலவும் பிரச்னை, எதிர்பார்ப்பு தொடர்பாக, செயலர் நன்கு தெரிந்துகொள்ள முடிந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

