சென்னை வெளிவட்ட சாலை அருகே தொழிற்பேட்டை அமைக்க வலியுறுத்தல்
சென்னை வெளிவட்ட சாலை அருகே தொழிற்பேட்டை அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 13, 2025 10:57 PM

சென்னை:மூலப்பொருட்களை விரைவாக எடுத்து வரவும், ஏற்றுமதி செய்யவும், வண்டலுார் - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி, புதிய தொழிற்பேட்டையை அமைக்குமாறு, தமிழக அரசுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதிக நகரமயமாக்கல் காரணமாக, சென்னைக்குள் செயல்படும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், நகருக்கு வெளியில் தங்களின் தொழிலை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகிஉள்ளது.
எனவே, சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி, புதிய தொழிற்பேட்டையை அமைக்க, 'சிட்கோ'வுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தொழில்முனைவோர் கூறியதாவது:
சென்னை கிண்டி, அம்பத்துார் மற்றும் காஞ்சிபுரத்தில் திருமுடிவாக்கம் என, சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள தொழிற்பேட்டைகள் அனைத்திலும் தொழில் நிறுவனங்கள் முழுதுமாக தொழிலை துவங்கிவிட்டன.
சென்னைக்குள் பல்வேறு இடங்களில் உள்ள குறுந்தொழில்களும், அதிக குடியிருப்பு, கடை உள்ளிட்ட காரணங்களால், நகரை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
ரெட்ஹில்ஸ் - மீஞ்சூர் இடைப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை இல்லை. இதனால், அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக, பல இடங்களுக்கு செல்கின்றனர்.
வெளிவட்ட சாலையை ஒட்டி தொழிற்பேட்டை அமைத்தால், வேலைவாய்ப்பு கிடைக்கும்; ஆலைகளுக்கு மூலப்பொருட்களை சிரமமின்றி எடுத்து வரலாம். எண்ணுார் துறைமுகம் வாயிலாக வெளிநாடுகளுக்கு விரைந்து ஏற்றுமதி செய்யவும் முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

