ADDED : மே 24, 2025 11:48 PM

சென்னைதமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, 'டிக்' எனப்படும் தொழில் முதலீட்டு கழகம் வழங்கும் கடன்களுக்கான ஆய்வுக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் தொழில் துவங்குவோர் நிலம் வாங்கவும், கட்டடம் கட்டவும், இயந்திரங்கள் வாங்கவும், மூலதன செலவுகளை மேற்கொள்ளவும், தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் பல்வேறு பிரிவுகளில் கடன் வழங்குகிறது.
இந்நிறுவனம் வழங்கும் மொத்த கடன்களில், 90 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக, 1,000 நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பொது கால கடன், திறந்த கால கடன் உள்ளிட்ட, 'டேர்ம் லோன்'களுக்கு, ஆய்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, கடன் தொகையை பொறுத்து, 5,000 ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இந்த கட்டணம், சிறு நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, நடப்பு நிதியாண்டில் கடன்களுக்கான ஆய்வு கட்டணத்தை முழுதுமாக தள்ளுபடி செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த விபரத்தை, அனைத்து தொழில்முனைவோருக்கும் தெரிவித்து, அடுத்த மாதம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்தி, கடன்களை வழங்குவதற்கு, டிக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரூ.5,000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை, ஆய்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது
ஆய்வுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டால், நடப்பு நிதியாண்டில் 1,300 நிறுவனங்கள் பயன்பெறும்